உலக புத்தக தினம் - ஏப்ரல் 23


வாசிக்கலாம் வாங்க...


சமகாலத்தில் நல்ல வாசகனாக, வாசிப்பு குறித்து வாசிப்பை நேசிப்போம், வாசிப்பு வசப்படும், புத்தகத்தின் கதை ஆகிய சிறிய புத்தகங்களை எழுதியவனாக நான் நண்பர்களிடையே அறிமுகமாகி இருப்பதால் அடிக்கடி நண்பர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும்.
“தோழர், என் மகளை நல்ல வாசகியாக உருவாக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன்,“ என்பார்கள்.
நானும் என் அனுபவத்தை வைத்து நண்பர்களுக்கு சில விஷயங்களைச் சொல்வதுண்டு.
சமீபத்தில் அப்படியான ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்தும், வாசிப்பு குறித்தும் ஆலோசனை கேட்கும் அழைப்பு.
“தோழர் லெனின் தனது பிறந்த நாளுக்கு புத்தகங்கள் வேண்டும் என்று கேட்ட போது எத்தனை புத்தகங்கள் பரிசாக வந்தன என்பதை அறிவீர்களா?“ ” தெரியுமே தோழர்.. ஒரு லட்சம் புத்தகங்கள்.”
”யாருமற்ற தீவில் உங்களை விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது, நான் புத்தகங்களை எடுத்துச் செல்வேன் என்று கூறியவர்?” “தெரியுமே”.
“ஒரு ஊரில் ஒரு நூலகம் திறக்கப்படும் போது, எது மூடப்படுகிறது என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்?“ “சிறைச்சாலை தானே. “
“தூக்கு மேடை ஏறும் கணம் வரை வாசித்துக் கொண்டே இருந்த புரட்சியாளன்?” “என்ன தோழர், அவரை எனக்குத் தெரியாதா? ”
“வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை முடிப்பதற்காக தனது அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளிப் போடச் சொல்லி மருத்துவர்களை வேண்டிய அறிஞர்?” “தோழர், அவர் பற்றி அறியாமல் தமிழ்நாட்டில் யாராவது இருப்பார்களா? விஷயத்துக்கு வாருங்கள் தோழர்,“ என்றார் அவர் பொறுமையிழந்து.
“விஷயமே அதுதான் தோழர்... நமக்கு வாசிப்பின் முக்கியத்துவம், புத்தகம் என்ன செய்யும் என்றெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனால், வாசிப்பதில்லை. அவ்வளவுதான். நீங்கள் உங்கள் மகள் பார்க்கும்படி வாசியுங்கள். அவளும் வாசிக்க ஆரம்பிப்பாள். நீங்கள் அவள் பார்க்கும் போதெல்லாம் கைபேசியை நோண்டினால், அவளும் கைபேசி கேட்பாள். நீங்கள் நாள் முழுவதும் தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்திருந்தால், அவளும் அவ்வண்ணமே உட்கார நினைப்பாள். வாசிப்புப் பழக்கத்திற்காக விசேஷமாக எதுவும் செய்ய வேண்டாம். உட்கார்ந்து வாசித்தால் போதுமானது,“ என்றேன்.
சற்று மண்டைக்கனமாகப் பேசிவிட்டோமோ என்று மனம் உறுத்தியது.
ஆனால் நண்பர், ”மிகச் சரியாகச் சொன்னீர்கள். நான் எதைச் செய்யத் தவறுகிறேன் என்பதை நன்றாகச் சுட்டிக்காட்டிவிட்டீர்கள்,“ என்று மனப்பூர்வமாகச் சொன்னார்.
ஷோபா சக்தியின் ம் என்றொரு நாவல். அந்த நாவலை எல்லாவற்றையும் அறிந்துகொண்டு, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு எதுவும் செய்யாமல் ம் கொட்டியவாறு கடந்து செல்பவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருப்பார். ( புத்தகம் கைவசம் இல்லை என்பதால் இந்த வரியை நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். ஓரிரு வார்த்தைகள் மாறி இருக்கலாம்.)
மற்ற விஷயங்களில் எப்படியோ, வாசிப்பைப் பொருத்தவரை நாம் ம் கொட்டிவிட்டு கடந்து செல்பவர்கள்தான்.
நமக்கு புத்தகங்களின் அருமை, அவற்றால் நாம் பெற்றவை, பெறுபவை, அவை காட்டும் புதிய வெளிச்சம், புதிய உலகம் எல்லாமே நன்றாகத் தெரியும். ஆனால் ஏனோ வாசிப்பதில்லை. ஒருவித தயக்கம். ஸ்டார்ட்டிங் டிரபிள். வண்டி செல்ஃப் எடுப்பதில்லை. யாரேனும் சற்று தூரம் தள்ளிவிட வேண்டியதாக இருக்கிறது.
முன்னொரு காலத்தில் புத்தகங்கள் மிக அரிதானவைகளாக இருந்தன. புத்தகங்களை உருவாக்குவது அத்தனை கடினமான வேலையாக இருந்தது.
களிமண்ணில் எழுதி அதை சுட்டு உருவாக்கிய புத்தகங்கள்..
விலங்குகளின் தோலைப் பதப்படுத்தி அதில் எழுதி ஒவ்வொரு பக்கத்தையும், ஒன்றின் கீழ் ஒன்றாக ஒட்டி உருவாக்கிய புத்தகங்கள்.
பொன்னியின் செல்வனை அப்படி எழுதினால் ஒவ்வொரு பாகமும் எத்தனை கிலோ மீட்டர் நீளம் வருமோ?
கம்பளம் போல் சுருட்டி சுருட்டி வைத்துப் படித்தார்கள்.
அச்சுப் புத்தகங்கள் வர ஆரம்பித்த காலத்தில் அவை மிக விலை உயர்ந்தவைகளாக, விலை மதிக்க முடியாதவைகளாக இருந்தன.
பொது இடங்களில் தண்ணீர் அருந்தும் டம்ப்ளா், பேனா முதலானவற்றை கட்டிப் போட்டிருப்பார்களே, அது போல கிறிஸ்துவ மடாலயங்களில் புத்தகங்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த காலங்களும் உண்டு.
19ம்நூற்றாண்டில் தமிழகத்தில் அச்சுப் புத்தகங்கள் வர ஆரம்பித்த காலத்தில் புத்தகங்களின் விலை படுபயங்கரமாக இருந்திருக்கிறது.
1862ல் உ.வே.சா மாயவரத்தில் ஒரு புத்தகக் கடையில் கம்பராமாயணத்தின் முழு தொகுதியைப் பார்க்கிறார்.
விலை ரூ 7. உடனே திருவாவடுதுறை சென்று தன் சித்தப்பாவிடம் 7 ரூபாய் கேட்கிறார். அன்று அவரது சித்தப்பாவின் மாதச் சம்பளமே 7ரூபாய்தான். ஆனாலும் அவர் முகம் சுழிக்காமல் 7 ரூபாய் தர, திரும்பவும் மாயவரத்திற்கு நடை பயணம். புத்தகத்தை வாங்கி விட்டார்.
அன்று மட்டும் அதற்காக அவர் நடந்த தூரம் சுமார் 36 கிமீ.
இன்று புத்தகம் வாங்குவதற்கு அத்தனை சிரமங்கள் இல்லை. பொருட்களை வாங்குவது குறித்த நமது மனோபாவமும் மாறிவிட்டது.
முன்பு எல்லோருமே தீபாவளிக்கு அல்லது பொங்கலுக்கு மட்டுமே புத்தாடை வாங்குவோம்.
இன்று எதிர் வீட்டுக் குழந்தையின் மூன்றாவது பிறந்த நாள் விழா என்றால் கூட, ஒரு புது டிரஸ் வாங்கும் காலமாக இருக்கிறது. விலை பற்றிய கவலை, இது நமக்குத் தேவையா என்ற கவலை எதுவும் இல்லை. இதற்குப் போய் இவ்வளவு செலவு செய்யலாமா? என்ற உறுத்தல் கிடையாது. தினமும் 800 ரூபாய் சம்பளம், அதுவும் மாதத்திற்கு 20 -25 நாட்களுக்குத் தான் கிடைக்கும் என்பது போன்ற வேலையில் இருப்போர் ஒன்றரை லட்ச ரூபாய் பைக்கில், 24000 ரூபாய் கைபேசியில் பேசியபடி பறக்கிறார்கள்.
பொழுது போகாமல் கைபேசியை நோண்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், கண்ணில் பட்ட பொருளை சற்றும் யோசிக்காமல் ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள்தான் நம்மில் பலரும்.
என் தோழி ஒருத்தி சமீபத்தில் என்னோடு பேசியபடியே 180 ரூபாய்க்கு மதிய உணவு ஆர்டர் செய்தாள். வந்த உணவுப் பொட்டலத்தை அவள் பிரித்த போது நான் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தேன். அவள் ஆர்டர் செய்திருந்தது தயிர்சாதம் !
இன்று அந்த தயிர்சாதப் பொட்டலத்தின் விலைக்கு, ஏன் அதைவிட குறைவான விலைக்கே கூட ஏராளம் ஏராளமான புத்தகங்கள் கிடைக்கின்றன.
இன்று புத்தகம் வாங்க உ.வே.சா போல் 36 கிமீ நடக்க வேண்டாம். ஆன்லைன் ஆர்டரில் வீடு தேடி வந்து என்னை வாசி, வாசி என்கிறது புத்தகம். எனவே, மற்ற அனைத்தையும் யோசிக்காமல் வாங்கும் மனநிலையை புத்தகம் வாங்குவதற்கும் விரிவுபடுத்துவது ஒன்றுதான் இன்று நாம் செய்ய வேண்டியது.
வாசிப்பின் சுவையறிந்து விட்டால் கண்டிப்பாக அதை விடாது செய்துவிடுவோம். ஏனெனில் தொட்டனைத் தூறும் மணற்கேணியல்லவா அது?
ஆண்டு தோறும் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் வருகிறது. நல்ல வாசகர்கள் எல்லோரும் புத்தக தின வாழ்த்துகளை, புத்தகங்களின் மேன்மையை, அவற்றால் தம் வாழ்வு எப்படி மாறியது என்ற அனுபவத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த ஆண்டு அந்த புத்தகதினத்தன்று, அவற்றையெல்லாம் விடாமல் படித்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து விட்டு, மற்றபடி, ஷோபா சக்தி சொன்னது போல் ம் கொட்டிவிட்டுக் கடந்து சென்றுவிடாமல், புதிய புத்தகம் ஒன்றை வாங்குவோம். புதிய புத்தகம் ஒன்றை நெருங்கிய யாருக்கேனும் பரிசளிப்போம். புதிய புத்தகம் ஒன்றை வாசிக்கத் துவங்குவோம்.
அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துகள்!

Comments

  1. அறிவு வலிமையை வளர்த்தெடுப்பதில் புத்தக வாசிப்புக்கு இணையானது வேறு எதுவுமில்லை. சொல்லப்போனால், முறைசார் கல்வி ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு தொழில், வேலை சார்ந்த வருமானத்துக்கோ குடும்ப அந்தஸ்துக்கோ திருமணப் பேரத்துக்கோ உதவலாம். ஆனால், அத்தகைய கல்வியைத் தாண்டி ஒருவர் தொடர்ந்து மேற்கொள்ளும் பரந்த வாசிப்பு, அதன் விளைவால் வரும் அறிவு வலிமை, எப்போது வேண்டுமானாலும் எந்தக் கோணத்திலிருந்து வேண்டுமானாலும் தாக்கக்கூடிய வாழ்க்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தைத் தரக்கூடியது.

    உலக புத்தக தின வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment