வாழ்க்கை வாழ்வதற்கே!

 


ஒருவர் முதலில் சிறியதாக மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார்.

பின்பு ஜூவல்லரி ஷாப், ஹோட்டல், துணிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் என வளர்ந்தது.

ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத் தாண்டி இருந்தது. வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்ககாத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை.

வீட்டுப் பணியாளர் தான் கதவை திறந்தார். அவர் முகக் குறிப்பை உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார். ஐயா அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் வந்தாங்க ரூம்ல தூங்குறாங்க.

ஏன் என்னாச்சு.?

பிரஷர் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. ஆனா பயப்படத் தேவை இல்லையாம். மருந்து மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடுமாம்.

எனக்கு போன் பண்ணி சொல்ல வேண்டியதுதானே.?

நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். ஸ்விட்ச்டு ஆஃப்னே வந்துச்சாம்.

அப்போதுதான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு.
தன் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது.

அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார்.
அங்கு அவர் மனைவி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவர் மனைவியின் தலையை வருடிக் கொண்டிருந்தார். சே இவளை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்கிற வருத்தம் எழுந்தது.

அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்து இருந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.

அவர் நினைவுக்கு வந்தது மிக மிகச் சொற்ப தினங்களே.
தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. என்பதை நினைத்ததும் அவருக்கு திடுக் கென்று இருந்தது.

அறையை விட்டு வெளியே வந்தார் அடுத்த அறை கதவை திறந்து பார்த்தார்.
இரு மகன்களும் படுக்கையில் படுத்து இருந்தார்கள்.

சத்தம் இல்லாமல் கதவை மூடினார். மாடியிலிருந்த தன் தனியறைக்கு போவதற்காக படிகளில் ஏறினார்.

ஐயா சாப்பிட ஏதாவது வேணுமா.? பணியால் கேட்டான்.

வேண்டாம் என்று சொல்லிவிட்டு.
அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.

உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார். இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோஜனம் நாம் யாருக்காக வாழ வேண்டும்.

பிள்ளைகள் மனைவி இவர்களோடு கூட நேரத்தை செலவழிக்க முடியாமல்.
அப்படி என்ன பிசினஸ் என்னென்னவோயோசனை வந்தது.

கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இன்றுதான் கடைசி.
இன்றோடு பிசினஸில் இருந்து ஓய்வு பெற்று விடவேண்டும். இனிமேல் வாழவேண்டும் எனக்காக என் மனைவிக்காக என் குடும்பத்திற்காக.

அப்போதுதான் கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்து இருப்பது அவருக்கு தெரிந்தது.
கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தானே வந்தோம் இது யார் எப்படி உள்ளே வந்தார்..?

யார் நீங்க எப்படி உள்ளே வந்தீங்க.? என்று கேட்டார்.

அந்த உருவம் சொன்னது நான் மரண தேவதை. உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்.

அவர் திடுக்கிட்டுப் போனார்.

அய்யாசாமி நான் இப்போதுதான் வாழணும்னு முடிவு செஞ்சிருக்கேன். இப்போ போய் என்னை கூட்டிட்டு போக வந்து இருக்கீங்களே கொஞ்சம் அவகாசம் கொடுங்க.

அவர் எவ்வளவோ பேசி மன்றாடிப் பார்த்தார். தன் செல்வத்தை எல்லாம் கொடுப்பதாக சொல்லிப் பார்த்தார்.

மரண தேவதை அவருக்கு செவிசாய்க்க மறுத்தது. அங்கிருந்து நகராமல் அவரை அழைத்துச் செல்ல ஆணி அடித்ததுபோல் அப்படியே உட்கார்ந்து இருந்தது.

ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க ஐயா. என் மனைவி குழந்தைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு. அதை முடித்துவிடுவேன்.என்று கேட்டார்.

அதற்கும் மரண தேவதை ஒப்புக்கொள்ளவில்லை.
அவர் கெஞ்சி அழும் குரலில் கேட்டார். சரி ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீர்களா உலகத்திற்கு நான் ஒரு குறிப்பு எழுதனும்.

மரண தேவதை ஒப்புக்கொண்டது. அவர் இப்படி எழுதினார்.

உங்களுக்கான நேரத்தை. சரியான வழியில் செலவழித்து விடுங்கள்.

என்னுடைய அனைத்து சொத்துக்களை ஈடாக கொடுத்தாலும் கூட.
எனக்காக ஒரு மணி நேரத்தை என்னால் வாங்க முடியவில்லை.

இது ஒரு பாடம் எனவே உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.

அப்போது யாரோ கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. அவர் திடுக்கிட்டு கண் விழித்தார்.

விடிந்து வெகுநேரம் மாகிவிட்டிருந்தது. அவர் எழுந்து போய் கதவை திறந்தார். பணியால் தான் வெளியே நின்று கொண்டிருந்தார்.

ஐயா ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேங்க நீங்க திறக்கலையா. பயந்துட்டேன் அதான் கொஞ்சம் பலமாக தட்டினேன்.

அவர் அவசரமாக திரும்பி தன் பெட்டுக்கு அருகில் இருக்கும் மேஜையை பார்த்தார்.

அங்கே அவர் எழுதிய குறிப்பு இல்லை.
பேனாவும் எழுதப்படாத வெள்ளைத்தாளும் தான் இருந்தன.

ஆதலால்
தயவுசெய்து வாழ்க்கையை வாழுங்கள்,நொடிக்கு நொடி கொண்டாடுங்கள், பேரானந்தமாக இருங்கள்,மனைவி,குழந்தை,கணவன்,அப்பா,அம்மா,உடன்பிறந்தவர்கள்,நண்பர்கள்,ஆடு,மாடு,கோழி,வயல்வெளி,பூச்செடி இப்படி எல்லாவற்றிற்கும் நிறைய நிறைய நிறைய நேரங்களை ஒதுக்கி வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசனையோடு அணு அணுவாக ரசித்து ரசித்து ஜாலியாக வாழ முடிவெடுங்கள் நண்பர்களே பணம் ‌பணம் என்பதை விட்டு வெளியே வாருங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே!
பணி. நிக்கோலாஸ் மாசிடோன் கா.ச

Comments

  1. I love the way you articulated this topic. I know it will help a lot of people understand it better.

    ReplyDelete

Post a Comment