என்னை உலகுக்குத் தந்தவனே!
எந்தையே என்
விந்தையே!
நான் நிற்க,
முனைப்பாய், முன்பாய்
நிற்பாயே!
பின்புறம் நின்றும்
எனைத் தாங்கி,
பேரிடர் காக்கும்
இடிதாங்கி போலவே
எளிமையாய் நிற்பாயே !
பண்பாய் மண்ணில்
நடந்திடவே, அன்பாய்க்
குணங்கள் தந்தாயே,
அத்தனையும் அன்பாலோ
அதட்டலின் சொல்லாலோ
அருமையாய்த் தந்தாயே!
பலகலை கற்றுத் தந்த
பல்கலைக் கழகம் நீயே!
பொருளீட்டிப் பொருளீட்டிப்
புரியாத பொருளையும்
புரிய வைத்தாரே !
வறுமையோ வசதியோ
பொறுமையாய்ப் புன்னகையில்
பூட்டி வைத்தாயே!
சுமையென்றும் அறியாமல்
சுகம் மட்டும் காட்டிக் காட்டி
இமை போலக் காத்தாயே!
மண்ணுக்குள் வேராய்ப்
புழுங்கி நின்று ,
கண்ணுக்கே தெரியா
இன்னல் பட்டு ,
வெளிச்சம் பகட்டு
என்பதே இன்றி,
உழைப்பு ஒன்றே
உள்ளத்தில் கொண்டு,
நீருறிஞ்சித் தந்து,
வாழ்வு தந்தாய் ,
நேராக்கி எம்மை
நிற்க வைத்தாய் ,
வேரான உன்னை
வேறாகப் பார்த்தோமே.!
தேரான உன்பலம்
காணமறந்தோமே!!
தாய்தந்த உண்டிக்கும்
தரமான உலகுக்கும்
போய் அலைந்து நீ
பொருள் சேர்த்த
காரணம் தானே! ..தந்தையே
சேயென்ற காலத்தும்,
சிறுவனென்ற காலத்தும்
வாலிபக் காலத்தும்
அறியாத இவ்வுண்மை
நீயின்றிப் போகையில்
நானுணர்ந்தேனே!
அற்புதம் நீயப்பா !
பொற்பதம் பணிய
உன்பாதம் தேடி நிற்கும்
பணி. நிக்கோலாஸ் மாசிடோன் கா.ச
Comments
Post a Comment