அடுத்தவர்கள் மனநிலையில் இருந்துப் பாருங்கள்!

 


    ஒரு ஊரில் ஒரு பணக்கார தந்தைக்கும், தன் ஒரே மகனுக்கும் ஓவியங்களைத் தங்கள் வீட்டில் சேர்த்து வைப்பதே வழக்கமாக இருந்தது. அவர்களிடம் பிகாசோ ஓவியங்களில் இருந்து ரப்ஹேல் ஓவியங்கள் வரை இருந்தது. அவர்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் தாங்கள் சேர்த்து வைத்து இருக்கும் ஓவியங்களை அவர்களுக்கு காட்டி மகிழ்வர்.

        வியட்னாம் போர் அப்போது ஆரம்பமானது, தன் ஒரே மகனை போருக்கு அனுப்பி வைத்தார். போரில் தன் நண்பன் உயிரைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரை விட்டான் அவருடைய மகன். தன் மகன் இறந்த துயரத்தில் அவர் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். ஒரு மாதம் கழித்து ஒரு இளைஞன் வந்தான். "ஐயா! என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால், உங்கள் மகனுக்கு நான் நண்பன். போரில் என் உயிரைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரைக் கொடுத்தான் உங்கள் மகன்"... "அவன் எப்போதும் உங்களைப் பற்றியே தான் பேசிக் கொண்டு இருப்பான். நீங்கள் ஓவியத்தின் மேல் தீராத ஆசை கொண்டவர் என்று சொல்லிக் கொண்டே இருப்பான். அவன் நினைவாக நான் உங்கள் மகனின் படத்தை உங்களுக்காக வரைந்து எடுத்து வந்துள்ளேன், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்" என்றான். தொடர்ந்து, "நான் பெரிய ஓவியன் கிடையாது! ஏதோ எனக்குத் தெரிந்தவரை வரைந்து உள்ளேன். பிரித்துப்பாருங்கள்" என்றான்.

        அவர் பிரித்துப் பார்த்தார், தன் மகனின் படத்தை நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார். "தம்பி! இந்தப் படத்துக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்?" என்றுக் கேட்டார். "ஐயா! போரில் என் உயிரையே காப்பாற்றினான் உங்கள் மகன். அவனுக்காக நான் வரைந்த படம். இதை உங்களுக்குப் பரிசாக தரவே எடுத்து வந்தேன்" என்றான். தன் மகனின் ஓவியத்தையும் மற்ற ஓவியங்களோடு சுவற்றில் மாட்டி வைத்தார். வருவோர் போவோரிடம் எல்லாம் தன் மகனின் ஓவியத்தைக் காட்டி மகிழ்ந்தார்.

        சில வருடத்தில் அவரும் இறந்துப் போனார். அவரது உறவினர் அவர் சேமித்து வைத்த ஓவியங்களை ஏலத்தில் விற்க முடிவெடுத்து, விளம்பரம் செய்தார். ஏலம் விடும் அன்று பிரபலங்களின் ஓவியங்களை வாங்க ஏகப்பட்ட கூட்டம் கூடியது. முதலில் அவரது மகனின் ஓவியத்தை விற்பதற்காக ஆரம்ப விலை 5000 ரூபாய் சொன்னார். யாரும் ஏலம் கேட்கவில்லை. "எல்லோரும் பிரபலங்கள் வரைந்த ஓவியத்தை முதலில் ஏலம் விடுங்கள்" என்றுக் கூச்சலிட்டனர்.

            ஏலம் விடுபவர் அதைக் காதில் வாங்காமல், "இந்த ஓவியத்தின் விலை 5000 ரூபாய்" என்று மீண்டும் சொன்னார். யாரும் ஏலம் கேட்கவில்லை. கூடியிருந்த கூட்டத்தை நோக்கி, "சரி! உங்களால் எவ்வளவு பணம் இதற்கு தர முடியும் என்று நீங்களே சொல்லுங்கள்" என்றார். மீண்டும் கூட்டத்தில் இருந்து,
"நாங்கள் இந்தப் படத்தை வாங்க வரவில்லை மற்றப் பிரபலங்களின் ஓவியத்தை முதலில் ஏலம் விடுங்கள்" என்றார்கள்.

        ஒரு பெரியவர் மட்டும் எழுந்து நின்று, "ஆயிரம் ரூபாய்" என்றார். அவர் வேறு யாரும் இல்லை அதே வீட்டில் சமையல் வேலைப் பார்த்தவர் தான், இந்த இளைஞன் சிறுவனாக இருந்த போது, இவர் அவனைத் தூக்கி வளர்த்தவர், அவனோடு விளையாடியவர், அவன் விரும்பும் சமையலைச் சமைத்து போட்டவர். அவன் அப்பாவுக்கு நிகரானவர். ஏலம் விடும் நபர் , "1000 ரூபாய் ஒரு தரம்" என்றார். யாரும் அதிகப்படுத்தி ஏலம் கேட்கவில்லை., இரண்டு தரம், மூன்று தரம் என்று சொல்லி ஏலத்தை முடித்தார். "ஏலம் முடிந்து விட்டது, எல்லாரும் செல்லலாம்" என்றார்.

        ஏலத்திற்கு வந்தவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. "ஒரு ஓவியம் மட்டும் தான் ஏலம் விட்டீர்கள் மற்ற ஓவியங்களையும் ஏலத்தில் விடுங்கள்" என்றனர். ஏலம் விட்டவர் சொன்னார், "இறந்துப் போனவரின் உயில்படி, தன் மகனின் ஓவியத்தை யார் வாங்குகிறார்களோ, அவர்களுக்கே மற்ற ஓவியங்களும் இந்த பங்களாவும் மற்றும் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் போய்ச் சேரும்" என்று எழுதியுள்ளார் என்றார். "அவரது மகன் ஓவியத்தை வாங்கிய அவர் தோட்டக்காரனுக்கே இந்தச் சொத்துக்கள் எல்லாம் போய் சேரும்" என்றார்.

    நண்பர்களே! நீங்கள் ஒரு சிலவற்றை ஒரு பொருளாக மட்டும் தான் பார்ப்பீர்கள். ஆனால், அது வேறு சிலருக்கு அது உயிராகத் தெரியும். அடுத்தவர்கள் மனநிலையில் இருந்துப் பாருங்கள், யாரையும், எதற்காகவும் உதாசீனப்படுத்தாதீர்கள்...

Comments