வெற்றிக்காக ஓடுவது...


வெற்றியை நோக்கி ஓடும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் வெற்றிக்காக ஓடுவது இயல்பான ஒன்றே. ஆயினும் அவ்வாறு ஓடும் போது அனைத்தையும் மறந்து வெற்றி மட்டுமே இலக்கு என  நாம் ஓடும் பொழுது சில விஷயங்களை கவனிக்கத் தவருகின்றோம்.

உடல் நலம்

உங்கள் வெற்றி குறித்த சிந்தனை கல்வி சார்ந்தோ, எதிர்காலம் சார்ந்தோ, வேலை சார்ந்தோ இருக்கும் பட்சத்தில் உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என நம் வீட்டு பெரியவர்கள் கூறுவதை அடிக்கடி கவனித்திருப்போம். அவற்றை பத்தோடு பதினொன்றாக விடாமல் கெத்தாக கடைபிடித்து வெற்றியை நோக்கி பயணியுங்கள்.

எண்ணங்கள்

வெற்றி குறித்து நீங்கள் பயணிக்கும் பொழுது எண்ணங்கள் மிக முக்கியம். உங்கள் தேவை எது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதனை மட்டும் சிந்தையில் வைத்து நேர்மறை எண்ணத்தோடு செயல்படுங்கள்.

புறக்கணிப்பு

சிலர் உறவுகளையும், நட்புகளையும் புறக்கணித்து வெற்றி மட்டுமே ஒரே இலக்கு என ஓடுகின்றனர். சற்று உங்கள் அருகில் இருக்கும் பெற்றோரையும் கவனிக்க தவறாதீர்கள். வெற்றி என்பது உங்கள் வாழ்க்கைக்கு தேவை தான். ஆனால் அதுவே உங்கள் வாழ்க்கை அல்ல. உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

உதவும் மனப்பான்மை

நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி ஓடும் பொழுது உங்கள் அருகில் இருக்கும் மனிதர்களையும் கவனிக்க தவறாதீர்கள். உங்கள் அருகிலேயே உதவி இன்றி வாழ்வில் முன்னேற துடிக்கும் இளைஞர்களையும் காண முடியும். அவர்களையும் கவனியுங்கள். உங்கள் முன்னேற்றத்தோடு அவர்களையும் முன்னேற வழி செய்து கொடுங்கள்.

ஆரோக்கியமான வெற்றி

உங்கள் வாழ்க்கைக்கான வெற்றி என்பது ஆரோக்கியமான வெற்றியாக இருக்க வேண்டுமே தவிர, எதிர்மறை எண்ணங்களோடு , சுயநல வெற்றியாக இருக்க கூடாது என்பதில் கவனமாய் இருங்கள்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளுதல்

எப்பொழுதும் வெற்றியை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் மனது தோல்வியை கண்டு சற்று கலங்கும். வாழ்வில் நிகழும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வெற்றி தோல்வி, இரண்டையும் மனதார ஏற்றுக்கொள்வதில் தான் இருக்கின்றது. ஆகவே தோல்வியையும் ஏற்றுக்கொண்டு தவறுகளை திருத்திக் கொள்ள பழகுங்கள்.

SMART WORK

“மரம் வெட்டுவதற்கு எனக்கு 9 மணிநேரம் கொடுத்தால், 6 மணிநேரம் நான் எனது கோடரியை கூர் செய்வேன்”- இதைச்சொன்னது ஆபிரகாம் லிங்கன். ஸ்மார்ட்வொர்க் என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம். திட்டமிடப்படாத கடின உழைப்பு முனைமழுங்கிய கோடரியை வைத்து 9 மணி நேரம் மரம் வெட்டுவது போலத்தான். எனவே நீங்கள் செய்யும் பணிகளில் இந்தப்பார்வை மிகவும் முக்கியம். இப்படி கிரியேட்டிவாக செய்தால் நாம செய்யும் செயல்கள் எல்லாமே நமக்கும் பிடிக்கும்.. மற்றவர்களுக்கும் பிடிக்கும்.

சரியான திட்டமிடல்

“உங்களுக்குத் தேவையற்ற பொருட்களை எல்லாம் வாங்கிக் குவித்தால், உங்களுக்கு தேவையானதை எல்லாம் ஒருநாள் விற்க நேரிடும்”- இப்படி மிரட்டுவது பொருளாதார நிபுணரும், சிறந்த தொழிலதிபருமான வாரன் பஃபெட். சேமிப்பும், ஒருவகையில் உங்களின் லாபம்தான். சேமிப்பும் ஒரு வருமானம்தான். எனவே சரியான திட்டமிடலுடன் சேமிப்பு ரொம்ப முக்கியம்.

நேரத்தை வீணாக்காதீர்

நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும், உங்களின் கடந்த ஒரு நொடியை கூட உங்களால் திரும்பப்பெற முடியாது. அப்படியெனில் அதன் மதிப்பு எவ்வளவு என யோசித்துப் பாருங்கள். எந்த விஷயத்தையும் நாளை என தள்ளிப்போடாமல், “தள்ளிப்போடாதே..” என இன்றே முடித்து விடுங்கள். ஒரு நொடியில் நீங்கள் எடுக்கும் முடிவு கூட, மிகப்பெரிய வெற்றிகளை உங்களுக்காக வைத்துக்கொண்டு காத்திருக்கலாம்.

அப்டேட்டாக இருங்கள்

வாழ்க்கையில் எப்போதும் கற்றுக்கொண்டே இருங்கள். ஏனெனில் வாழ்க்கை எப்போதும் கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது. உலகம் தன்னை தினந்தோறும் மாற்றிக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப நாமும் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், உங்கள் துறையில் வந்திருக்கும் புதுமைகள் என எப்போதும் அப்டேட்டாக இருங்கள். இல்லையெனில் நீங்கள் பழசாகத் தெரிவீர்கள்.

வெற்றி எப்போது கிட்டும்: தனக்குப் பிடித்த செயலை தன்னம்பிக்கையுடனும் தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் தெளிவாகவும், தைரியமாகவும் நேர்மறை சிந்தையோடு முடிவு எடுத்தால் வெற்றி நிச்சயம்.

Comments